Home » , , » வடக்கு முதல்வருக்கு எதிரான செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி நிறுத்த வேண்டும்: சுரேஷ்

வடக்கு முதல்வருக்கு எதிரான செயற்பாடுகளை தமிழரசுக் கட்சி நிறுத்த வேண்டும்: சுரேஷ்

“நீண்ட காலமாக தமிழ் மக்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். அந்த உரிமையை வென்றெடுக்க நீண்டகால ஆயுதப் போராட்டம் நடந்தது.
அம்மக்களுக்கான இனப்பிரச்சினைக்குரிய முழுமையான தீர்வுக்கு முதல்வரின் நடவடிக்கை மிகத் தேவையானது.

 இந்நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றமை இன்றைய காலத்தில் தேவைதானா என தமிழரசுக் கட்சி யோசிக்க வேண்டும்” என்று ஈ.பி. ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான  சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

 கொழும்பில் ஊடகம் ஒன்றுக்களித்த பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:


“தேர்தல் சமயத்தில் வடமாகாண முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டதாகவும் அந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விஞ்ஞாபனத்துக்கு எதிராக இருப்பதாகவும் வவுனியா கூட்டத்தின் போது சொல்லப்பட்டது. முதலமைச்சரைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுதான் அவரது அறிக்கையின் சாராம்சம்.

 இது ஒருபுறம் இருக்க முதலமைச்சர் முக்கியமான தீர்மானங்களை வடமாகாண சபையூடாக நிறைவேற்றியிருக்கின்றார். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளார். இது முக்கியமான தீர்மானமாகும். இலங்கையில் தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்ச்சியாக இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் அதுவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து எடுத்த தீர்மானம் என்பது சர்வதேச ரீதியில் முக்கியமானதாகும்.

 அதுவும் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை கமிசன் விசாரணை மேற்கொண்ட சமயம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக, சர்வதேச பொறிமுறையூடாக இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை அடுத்தகட்டமாக சர்வதேச பொறிமுறையூடாக விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்ற தீர்மானம் இரண்டாவதாக முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

  அந்த அடிப்படையில் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய வல்லமையும் சக்தியும் முதல்வருக்கு இருந்தது என்பது பாராட்டப்பட வேண்டியதொன்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் கொண்டு வரப்பட்டதன் பிற்பாடே நாங்கள் எதிர்பார்த்த விடயங்களில் அவர் மேற்கொண்ட இரண்டு விடயங்களும் முக்கியமானதாகும். அவர் முதலமைச்சராக கொண்டு வரப்பட்டவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்தது இதுதான். என்று அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

-->